எஃப்-டிராய்டு (F-Droid) திறந்த மூல செயலிகள் மட்டுமே கொண்ட அங்காடி

பாமர மக்கள் தகவல் தொழில்நுட்பத்தில் வல்லுனர்களாக உடனடியாக ஆக முடியாது. இதற்குத் தீர்வு என்ன? பாதுகாப்பான செயலிகளை யாராவது ஓரிடத்தில் சேர்த்து வைத்திருந்தால் வசதியாக இருக்குமல்லவா? வைத்திருக்கிறார்கள், அதுதான் எஃப்-டிராய்டு (F-Droid) திறந்த மூல செயலிகள் மட்டுமே கொண்ட அங்காடி. இது இலாப நோக்கமற்ற தன்னார்வ திட்டம். இவர்கள் எவ்வளவு எச்சரிக்கையானவர்கள் என்றால், கூடியவரை மூல நிரலை வாங்கி பாதுகாப்பு அல்லது அகவுரிமை பிரச்சினைகள் உள்ளதா என்று சோதனை செய்து பின்னர் தாங்களே இருமமாக்குகிறார்கள்.

எஃப்-டிராய்டு அங்காடி கூகிள் விளையாட்டு அங்காடியில் கிடையாது. எஃப்-டிராய்டு இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். இதை நிறுவத் தொடங்கினால் “தெரியாத மூலங்கள் (Unknown sources)” நிறுவலாம் என்று அனுமதிக்க வேண்டும். நிறுவிய பின்னர் இதில் செயலிகளைத் தேடலாம். மதிப்பீடுகள், கருத்துரைகள் மற்றும் பதிவிறக்க எண்ணிக்கை கிடையாது. ஆனால் ஆன்டிராய்டு விளையாட்டு அங்காடியைப் போலவே ஃபாஸ்டிராய்டு இணையதளத்தில்பிரபலமான மற்றும் புதிய செயலிகள் பட்டியலைப் பார்க்கலாம். செயலிகளின் திரைப்பிடிப்புகளையும் பார்க்கலாம்.

இவை தன்னார்வலர்கள் உருவாக்கிய கட்டற்ற திறந்த மூல செயலிகள். சந்தைகளிலுள்ள மற்ற வணிக செயலிகளுடன் ஒப்பிடும்போது பயனர் இடைமுகம் அவ்வளவு நயமிக்கதாக இருக்காது. ஆனால் விளம்பரங்களும் தடமறிதலும் எந்தச் செயலியிலும் கிடையாது. செயலிக்குள் சரக்கு அல்லது சேவை வாங்கச்சொல்லி நச்சரித்தல் (in-app purchases) கிடையாது. இக்காரணத்தினால் மின்கலம் ஆயுளும் அதிகரிக்கும். உங்களுடைய தரவுகள் ஒதுக்கீட்டையும் சாப்பிடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*