SCHOLARSHIP பெற உதவும் WEBSITES

கல்விச்செலவை ஈடுகட்ட பெரிதும் உதவியாக இருப்பது உதவித்தொகைகள் தான். மத்திய, மாநில அரசுகள், தனியார் அமைப்புகள், நிறுவனங்கள் மாணவர்களுக்கு ஏராளமான உதவித்தொகைகளை வழங்கி வருகின்றன. ஆனால், அது எல்லோருக்கும் கிடைப்பதில்லை. ஏன்..? அப்படியான உதவித்தொகைகள் வழங்கப்படுவதைக் கூட பல மாணவர்கள் அறிவதில்லை. அப்படியான மாணவர்களுக்காகவே இந்த இணையதளங்கள். இந்த இணையதளங்களில் பள்ளிக்கல்வி முதல் வெளிநாட்டுப் படிப்பு வரை வழங்கப்படும் உதவித்தொகைகள் பற்றி அறியலாம்.

www.education.nic.in
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் இணையதளம் இது. இத்தளத்தில்  பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வித் துறை தொடர்பான ஏராளமான செய்திகள் உள்ளன. இந்திய அரசாங்கத்தால் மாணவர்களுக்கு அறிவிக்கப்படும் உதவித்தொகை அறிவிப்புகள் மட்டுமின்றி  பிற நாடுகளால் இந்திய மாணவர்களுக்கு அறிவிக்கப்படும் சலுகைகள், கல்வி உதவித்தொகைகள் பற்றிய விவரங்களும் இத்தளத்தில் வெளியிடப்படுகின்றன.

www.scholarship-positions.com
இளநிலை, முதுநிலை, முனைவர் பட்டப் படிப்பு மற்றும் அதற்குப் பிந்தைய கல்விகளுக்கான உதவித்தொகை நிலவரங்களை தெரிந்துகொள்ள இந்த வலைத்தளம் உதவுகிறது. பல்கலைக்கழக வாரியாக உதவித்தொகை விவரங்கள் மட்டுமின்றி செய்தி மடல்களைப் பெறும் வசதியும் இதில் உண்டு. மேலும் இதில் மாணவர்களுடைய சந்தேகங்களுக்கும் பதில் தரப்படுகிறது. இதைத் தவிர, வெளிநாட்டுப் படிப்புகள் சம்பந்தமான உதவிக் குறிப்புகள், அதற்கான உதவித்தொகைகள் பற்றிய தகவல்களும் இதில் உண்டு.

www.studyabroadfunding.com
வெளிநாட்டுப் படிப்பிற்கான உதவித் தொகை கோருபவர்களுக்கானது இந்தத் தளம். குறிப்பாக, அமெரிக்காவில் படிப்பதற்கான எல்லா விவரங்களும் இந்தத் தளத்தில் உண்டு. அமெரிக்க பல்கலைக்கழகங்கள், தனியார் நிறுவனங்கள் தரும் உதவித்தொகைகள் பற்றியும் அறியலாம்.

www.eastchance.com
இந்த வலைத்தளம் இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை விவரங்களைக் கொண்டிருப்பதோடு, கல்விக்கடன்கள், கோடைகால வகுப்புகள் பற்றிய விவரங்களையும் கொண்டுள்ளது. நாடுவாரியாக விவரங்கள் தெளிவாக தொகுக்கப்பட்டுள்ளன. கையாள்வதும் எளிதாக இருக்கிறது.

www.momascholarship.gov.in
இந்திய சிறுபான்மையினர் நலத்துறை நிர்வகிக்கும் இந்த இணையதளத்தில் சிறுபான்மை சமூக மாணவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் பல்வேறு கல்வி உதவித்தொகைகளைப் பற்றி அறியலாம். தகுதி வாய்ந்த மாணவர்கள் இந்த இணையதளத்திலேயே விண்ணப்பிக்கவும் முடியும்.

www.scholarships.gov.in/main.do
மத்திய தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை நிர்வகிக்கும் இந்த National Scholarships Portal-லில் மத்திய அரசு வழங்கும் அத்தனை கல்வி உதவித்தொகைத் திட்டங்களும் அப்டேட் செய்யப்படுகின்றன. உதவித்தொகைகள் பெறுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களையும், புகார்களையும் இந்தத் தளத்தில் மாணவர்கள் பதிவு செய்யலாம்.

www.vidyalakshmi.co.in
கல்விக்கடன் பெறுவதில் மாணவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை களைவதற்காக உருவாக்கப்பட்ட இணையதளம் இது. என்.எஸ்.டி.எல். நிறுவனத்தோடு இணைந்து மத்திய அரசு நடத்தும் இந்தத் தளத்தில் கல்விக்கடன் கேட்டு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். கடன் மறுக்கும் வங்கிகள் மீது புகார் செய்யலாம். மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித்தொகைகள் பற்றியும் அறியலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*